தமிழ்நாடு

“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்

“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்

webteam

அரசு என்பது மக்கள் நலனுக்காக தான் தவிர, வளர்ச்சி என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு திட்டங்களை செயல்படுத்தவற்கு அல்ல என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

எட்டு வழிச்சாலை தொடர்பாக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்தது. அத்துடன் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் எட்டுவழிச்சாலை தீர்ப்பின் முழுவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், இந்தச் சாலை அமைக்கப்படுவதால் விலங்குகள் பாதிக்கப்படும் என்றும், மனிதர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த அவசரகதியில் மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும், அதற்கு கடும் கண்டனத்தையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய அரசு வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அத்துடன் இது பசுமை வழிச்சாலையே இல்லை என்றும் சாடியுள்ளனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிக்குள் சாலை அமைத்து, அதற்கு சுற்றுச்சூழல் ஆய்வின் ஒப்புதல் தேவையில்லை என்பது, ‘வண்டியை முன்னே செல்லவிட்டு, குதிரையை பின்னால் கட்டும் கதையாக உள்ளதாகவும்’ நீதிபதிகள் விமர்சித்துள்ளனர். 

மேலும், அமைதி வழியில் போராடியவர்களை காவல்துறை கொண்டு அடக்கியதாகவும், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரே அது நிறுத்தப்பட்டதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்கள் நல அரசு என்பது விவசாயத்தையும், பொதுநலனையும் தான் பாதுகாக்க வேண்டுமே தவிர, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கண்மூடிக்கொண்டு எதையும் செயல்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.