தமிழ்நாடு

பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளையாடல்

பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளையாடல்

kaleelrahman

உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயில், ஆவணி மூலத்திருவிழா நிறைவுபெறறது. கொரோனா எதிரொலியாக பத்திற்கும் மேற்பட்ட திருவிளையாடல் லீலைகள் பக்தர்களின்றி நிகழ்த்தப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில், சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவையாகும். இந்த சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும்.

இந்நிலையில், பிரசித்தி பெற்ற ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய 10 திருவிளையாடல் லீலைகள் நடக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவலால் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்வில்லை.

இதையடுத்து ஆவணி மூலத்திருவிழாவில் கடந்த 11-ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசமும், 12-ஆம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 13ஆம் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 14-ஆம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 15-ஆம் தேதி உலவவாக்கோட்டை அருளியது, 16-ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெற்றது.

17ஆம் தேதி காலை, வளையல் விற்ற லீலையும், 18ஆம் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 19ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், இன்று விறகு விற்ற லீலையும் சிறப்பாக கோயில் உள் ஆடி வீதியில் நடைபெற்றது.

கொரோனாவால் கோயிலை விட்டு சுவாமி வெளி புறப்பாட்டிற்கு தடை உள்ளதால் திருவிழாக்கள் மற்றும் திருவிளையாடல் லீலைகள் அனைத்தும் ஆடி வீதியில் நடைபெற்றது.