தமிழ்நாடு

பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்

பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்

webteam

திருவாரூரில் ஆற்றைக் கடக்க பாலம் இல்லாததால் பத்து கிலோமீட்டர் வரை கிராம மக்கள் சுற்றிச் செல்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் உள்ள வெட்டாற்றின் குறுக்கே பாக்கம் கிராமத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்படவில்லை. இதனால் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் பகுதிகளுக்கு வந்து செல்ல மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். பாக்கம், கள்ளுகுடி, கட்டளை, கரையா பாலையூர், பூங்காவூர், நெய்க்குப்பை, ஆர்பாவுர், ஆதிச்சமங்கலம், கீழ பாலையூர், வளவநல்லூர் கிராமங்களில் இருந்து பொதுமக்கள் நேரடியாக மடப்புரம் பகுதிக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் படகு மூலம் பயணித்து வருகின்றனர். 

குழந்தைகள் படகில் பள்ளிக்கு செல்வது அச்சமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, படகை செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும், அப்போது எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் இருப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற காலங்களில் 10 கி.மீ வரை சுற்றிச்செல்வதால், மருத்துவமனைக்கு செல்வது மிகுந்த சிரமம் என்றும் குறை கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மேலும், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.