தமிழ்நாடு

முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்: திருவாரூர் எம்.எல்.ஏ

முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்: திருவாரூர் எம்.எல்.ஏ

JustinDurai
சட்டசபையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதனையொட்டி திருவாரூரில், திருவாரூர் மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், ''3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமில்லாமல் தமிழக சட்டமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியவர் ஸ்டாலின்.
வேளாண் சட்டங்கள் ரத்து குறித்த அறிவிப்பு வந்ததும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வருக்கு மிகப்பெரிய பாராட்டு விழா வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நடத்தப்படும். இதற்காக வடகிழக்குப் பருவமழை முடிந்த பிறகு அல்லது இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு முதல்வரிடம் அனுமதி பெற்று பாராட்டு விழா நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.