திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  PT
தமிழ்நாடு

திருவாரூர்: ஆட்சியரிடம் விவசாயி வைத்த அசத்தல் கோரிக்கை!

ஓராண்டுக்கு இலவசமாக ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கு சத்துணவுக்கு காய்கறிகளை கொடுக்க, ஆட்சியரிடம் அனுமதி கேட்டுள்ளார் ஒரு விவசாயி. அனுமதி வாங்கி தருவதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்

PT

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கோட்டூர் ஒன்றிய விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலம் ஊரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், “காரியமங்கலம் ஊரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கு ஓராண்டுக்கு சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை நான் நாள்தோறும் இலவசமாக தருகிறேன். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மேலும் பேசுகையில் அவர், “விக்கிரபாண்டியம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஆண்டு இறுதித் தேர்வு வரும்பொழுது மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக என்னுடைய பங்களிப்பில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவினை மாலை நேரத்தில் வழங்கி வந்துள்ளேன். இதனால் அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து நிறைய மாணவர்கள் நன்றாக தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

அதுபோலவே என்னுடைய காரியமங்கலம் ஊரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளிக்கும் ஓராண்டுக்கு தேவையான சத்துணவு காய்கறிகளை ஒவ்வொரு நாளும் தேவையான அளவுக்கு நான் தர விரும்புகிறேன். அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி தர வேண்டும்” என்றார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர், அனுமதி வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

விவசாயியின் இந்த முயற்சிக்கு ஆட்சியரும் மற்ற விவசாயிகளும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.