தமிழ்நாடு

திருவாரூர்: சைக்கிள் மீது லாரி மோதி விபத்து; மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

திருவாரூர்: சைக்கிள் மீது லாரி மோதி விபத்து; மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

kaleelrahman

மகளின் கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை உயிரிழந்துள்ளார். விபத்திற்குப் பின் தப்ப முயன்ற லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் பள்ளிவராமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமணி (60). இவரது மகள் சௌமியா (22). இருவரும் ஒரே ஜவுளிக் கடையில் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் இருவரும் தனித்தனியே சைக்கிளில் பணிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது கேக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த மணல் லாரி வீரமணியின் சைக்கிள் மீது மோதியது. இதில், மகள் கண் முன்னே வீரமணி லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள், வீரமணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை ஒரு கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று சிறைபிடித்தனர். தொடர்ந்து வீரமணியின் சடலத்துடன் கிராம மக்கள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பட்டு சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் வீரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

இந்த பகுதியில் சட்டவிரோதமாக சென்று வரும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுத்துவதாகவும், இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த வீரமணி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.