தமிழ்நாடு

திருவண்ணாமலை கோயில் யானை "ருக்கு" உயிரிழந்தது

திருவண்ணாமலை கோயில் யானை "ருக்கு" உயிரிழந்தது

webteam

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை "ருக்கு" உடல்நலக் குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தது.

அண்ணாமலையார் கோயில் யானை ருக்குவுக்கு வயது 30. இந்தப் பெண் யானை கடந்த 23 ஆண்டுகளாக கோவிலில் பல்வேறு சேவைகள் செய்து வந்தது. அண்ணாமலை கோயிலின் முக்கிய திருவிழாக்கள், உற்சவங்களில் ருக்கு தொடர்ந்து பங்கேற்று வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கோயிலின் நந்தவன மண்டபத்தில் ருக்குவை தங்க வைப்பதற்காக கொண்டு சென்றிருக்கிறார்கள் அப்போது. அந்த இடத்தில் நாயும், குரங்கும் சண்டையிட்டு கொண்டிருந்திருக்கிறது. இதைப் பார்த்து அச்சமடைந்த ருக்கு வேகமாக ஓடியுள்ளது. அப்போது இரும்புச் சுவறில் மோதிய ருக்குவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் குன்றிய ருக்கு, நேற்றிரவு உயிரிழந்தது.

தமிழக அரசு நடத்தும் புத்துணர்வு முகாமில் கலந்துக்கொண்ட ருக்கு, மார்ச் 12 ஆம் தேதிதான் மீண்டும் கோயிலுக்கு வந்தது. அப்போது கோயிலில் யானை ருக்குவுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மேளதாளங்கள் முழங்க ஓய்வு அறைக்கு யானை ருக்கு அழைத்துச் செல்லப்பட்டது. தினசரி, தொடர்ந்து பக்தர்களுக்கு 5 ஆம் பிரகாரத்தில் நின்று ஆசி வழங்கிய ருக்குவின் மறைவை கேட்ட, திருவண்ணாமலை ஊர் மக்கள், யானை ருக்குவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.