தமிழ்நாடு

தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழப்பு ? - பெற்றோர் குற்றச்சாட்டு

webteam

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போடப்பட்ட கைக்குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த விளை கிராமத்தைச்சேர்ந்த லாரி டிரைவர் சீரஞ்சிவி. இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு லித்தேஷ் என்ற 5 மாத குழந்தை இருந்தது. லித்தேஷூக்கு நேற்று ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடியற்காலை குழந்தை லித்தேஷ் திடீரென மூச்சு பேச்சுயின்றி காணப்பட்டதால் உடனடியாக பெற்றோர்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி கிராமிய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நடுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் உடல்நிலை சரியில்லாத தங்கள் குழந்தைக்கு, மருத்துவர் ஆலோசனையை கேட்காமல் செவிலியர் தடுப்பு ஊசி போட்டதால் தான் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.