தமிழ்நாடு

நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல்: ஆர்வமுடன் ரசித்த பொதுமக்கள்

நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல்: ஆர்வமுடன் ரசித்த பொதுமக்கள்

webteam

சென்னை திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகள் உயிரொளிர்வின் காரணமாக, நீல நிறமாக காட்சி அளித்தன.

சென்னை மக்கள் பொழுதை கழிக்கும் இடங்களில் திருவான்மியூர் கடற்கரையும் ஒன்று. நேற்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். இரவானதும் கடலலைகள் நீல விளக்கு பொருத்தப்பட்டது போல நிறம் மாறி காட்சி அளித்தன. இதனைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த தகவல் பரவியதும் பலரும் ஒளிரும் கடலை காண கடற்கரைக்கு படையெடுத்தனர். 

டயனோப்ளாஜலேட்ஸ் என்ற ஒரு பாசி காரணமாக கடல் நீல நிறமாக காணப்பட்டதாகத் தெரிகிறது. அதாவது, சிறுமீன்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் அந்தப் பாசி, நீலநிற வண்ணத்தை வெளியிடுமாம். அப்போது ஒளி வெள்ளத்தில், பெரிய மீன்கள் சிறிய மீன்களை தின்றுவிடுமாம். திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரைப் பகுதியில் இந்த அரிய நிகழ்வு நேற்று காணப்பட்ட நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

எனினும், அண்மையில் பெய்த மழையால் கடலில் சேர்ந்த கழிவுகளில் இருந்து நைட்ரஜன் கலந்த பொருட்களில் இருந்து இந்த ஒளி வெளியாகியிருக்கலாம் என தேசிய கடலோர ஆராய்ச்சி மையமான NCCRன் விஞ்ஞானி பிரவாகர் மிஸ்ரா தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த மையத்தின் விஞ்ஞானிகள் இன்று நேரில் ஆராய்ச்சி செய்யவுள்ளனர்.