தமிழ்நாடு

தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக புகார் - மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் 

webteam

திருத்தணி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில்தான் குழந்தை இறந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கோதண்டராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிதாஸ். இவரது மனைவி சோனியாவிற்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், இன்று மருத்துவர்கள் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் அக்குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகின்றது. மருத்துவர்கள் கவனக்குறைவால் தான் தங்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறி உறவினர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் அரசு மருத்துவமனை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது சோனியாவின் சகோதரர் அமாவசை என்பவர் திடீரென்று அங்குள ஆலமரம் உச்சிக்கு சென்று குழந்தை இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் எனவும் மிரட்டினார். 

இதையடுத்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மரத்திலிருந்து மீட்டனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. குழந்தை இறப்பு குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், இரும்பு சத்து குறைபாடுடன் பிறந்த குழந்தைக்கு தாய் பால் கிடைக்காத நிலையில் மற்றவர்களிடமிருந்து பால் கொடுத்த போது பொறை ஏறி இறந்ததாக தெரிவிக்கின்றனர். குழந்தை இறந்த சம்பவம் திருத்தணி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.