திருவள்ளூர் அருகே இருதரப்பு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 2 வருடம் மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லம்பேடு என்ற மீனவ கிராமம் தீராத இருதரப்பு பகை கொண்ட பகுதியாக திகழ்கிறது. சினிமா படங்களில்
வருவதுபோல இந்தக் கிராமத்தில் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளன. மேடை தோறும் அரசியல்வாதிகள்,
நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம உரிமை இருப்பதாக பேசி வரும் இந்த காலகட்டத்திலும், கோயிலுக்கு ஒரு தரப்பினர்
செல்லக்கூடாது என்ற அவல நிலை இந்த கிராமத்தில் நீடித்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்த கிராமத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில்
அண்ணாதுரை, சத்திரத்தான் என 2 பேர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து சத்திரத்தான் தரப்பை சேர்ந்த 28 குடும்பங்கள் ஊரை
விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிழைக்க வழியின்றி சொந்த கிராமத்தை விட்டு வெளியேற அந்த 28 குடும்பத்தினரும், நொச்சிக்குப்பம்
என்ற மீனவ கிராமத்தில் தஞ்சமடைந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் ஒன்றில் அவர்கள் வசித்து வந்தனர். சொந்த ஊரை விட்டு வந்து
அகதிகள் போல இருந்த அவர்கள், இங்கும் மீன்பிடி தொழில் செய்து தங்கள் வாழ்வை கழித்து வந்தனர்.
சாப்பிட வழியிருந்தாலும், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரின் படிப்பு கேள்விக்குறியானது. அவர்கள்
பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 28 குடும்பத்தினரும் அரசு அதிகாரிகளிடம் முறையிட, மற்றொரு தரப்பிடம்
அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலமுறை பேசியும் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில் கடந்த மே 13ம்
தேதி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில், 28 குடும்பத்தினரும் தங்களை கருணை கொலை செய்ய வலியுறுத்தி ஆட்சியர்
சுந்தரவல்லியிடம் மனு அளித்தனர்.
இதன்பின்னர் இருதரப்பினரையும் ஒன்றாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இன்று
கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் ராஜகோபால் ஆகியோருடன், காவல்துறை பாதுகாப்போடு 28 குடும்பங்களையும் வல்லம்பேடு
அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டமிட்டபடியே பாதுகாப்போடு வாகனங்கள் மூலம் 28 குடும்பத்தினரும் சொந்த
கிராமமான வல்லம்பேடு சென்றனர். அங்கு கூடியிருந்த மற்றொரு தரப்பினர், அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இருந்தபோதே
“இவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை” எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய
அதிகாரிகளுடனும் அவர்கள் வாக்குவாதம் தொடந்தது.
பின்னர் ஒருவழியாக சமாதானம் செய்யப்பட்டு, 28 குடும்பத்தினரையும் சொந்தவீடுகளில் விட்டுச்சென்றனர். ஆனால் வீடுகளின் நிலை
தற்போது படுமோசமாக இருந்துள்ளது. இருப்பினும் தங்களை சொந்த வீட்டில் சேர்த்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட 28
குடும்பத்தினரும், தங்களுக்கு அடிப்படை வசதியான தண்ணீர், உணவு வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும்
வாழ்வாதாரத்திற்கு படகு, மீன்பிடி வலைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இந்த அவலம் எங்கோ நடக்கவில்லை? சென்னைக்கு அருகே தான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைத்து அனைவரும் வருந்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
(தகவல்கள் : எழில், புதிய தலைமுறை செய்தியாளர், திருவள்ளூர்)