தமிழ்நாடு

திருவள்ளூர்: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் பாய்ந்த இளைஞர்!

திருவள்ளூர்: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் பாய்ந்த இளைஞர்!

webteam

பொன்னேரியில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் இளைஞர் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மக்கள் உதவியால் சிறு காயத்துடன் நல்வாய்ப்பாக அவர் உயிர் தப்பிய நிலையில், 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் அவரின் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு ஆமைவேகத்தில் மெதுவாக நடைபெற்று வருகிறது. 2021க்குள் நிறைவடைய வேண்டிய இந்த திட்டம் மிக தொய்வுடனும் அலட்சியத்துடனும் நடைபெற்று கொண்டிருப்பதால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே உள்ளன. இவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகளில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் இருசக்கர வாகனங்களில் மட்டுமன்றி, மக்கள் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட என்ஜிஓ நகரில் உள்ள இளங்கோ தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் அருகே அந்த பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கின்றார். அப்போது அந்த ராட்சத பள்ளத்தில் நீர் நிறைந்து இருந்த காரணத்தினால், நிலைகுலைந்து பத்து அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் அவர் அப்படியே விழுந்தார். பள்ளத்தில் விழுந்து தத்தளித்த அந்த இளைஞரை அங்கிருந்த சிலர் ஓடி வந்து மீட்டனர். இதனால் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார். இதனை தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை கொண்டு சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

பொன்னேரியில் மக்களை பயமுறுத்தும் வகையில் உள்ள பள்ளங்களை மூட குடிநீர் வடிகால் வாரியமும் நகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.