தமிழ்நாடு

மாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்!

webteam

தாராபுரம் பேருந்து நிலைய சுவர்களில் கல்லூரி மாண-மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை பொதுமக்கள் பாராட்டினர். 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் உடுமலை பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் ஒருங்கிணைந்து "கரம் கொடு அறம் செய்ய" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தாராபுரம் பேருந்து நிலையத்தின் நடுவில் உள்ள சுவர்களில் ஒட்டபட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், தேவையற்ற விளம்பரங்களை அப்புறபடுத்திய மாணவர்கள், அங்கிருந்த குப்பை கூளங்களை சுத்தம் செய்தனர்.

பின்னர் அந்தச் சுவரை சுற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பதின் அவசியம், தண்ணீர் சேமிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான பல்வேறு ஓவியங்களை வரைந்தனர். 

அத்துடன் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதினர். 20க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளின் இந்தச் செயலால், குப்பை மேடாக இருந்த பேருந்து நிலைய சுவர், வண்ண ஓவியங்களை கொண்டு அழகுடன் காட்சியளித்தது. இதைக்கண்ட பொதுமக்கள் பலரும் வண்ணங்களால் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவ-மாணவிகளை பாராட்டிச் சென்றனர்.

இதுகுறித்து மணவ-மாணவிகள் கூறும் பொழுது, தாங்கள் அனைவரும் சேர்ந்து மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைய உள்ளதாக தெரிவித்தனர்.

இதுபோன்று பல்வேறு வகைகளில் சமுதாயப்பணியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.