செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு அவரவர் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லையென சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை உள்ளது
“தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லையென சொல்லக் கூடிய அளவிற்கு நிலைமை உள்ளது. திமுக கூட்டணி மக்களின் நல்லாதரவை பெற்று, வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியை பெரும் என நம்புகிறேன்.
சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்
திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேலாக அங்கம் வகிக்கிறோம். இதில், 2 கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு கையெழுத்திட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கெடுத்து விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம்.
சுமூகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும். நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில், ஒரு தொகுதி பொது தொகுதி. ஆனால் பல கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளை பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம்.
அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது
பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் பாஜக அதிமுகவை விடுவதாக இல்லை. அதிமுகவை மூன்றாம் நிலைக்குத் தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதனை ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளேன்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன்
சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்குதான் நான் நிற்பேன். அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இம்முறை தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
கர்நாடகாவில் மூன்று தொகுதிகளிலும் ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும் கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியிலும் மற்ற மாநிலங்களில் I.N.D.I.A. கூட்டணியிலும் போட்டியிட முயற்சித்து வருகிறோம்” என தெரிவித்தார்.