தமிழ்நாடு

’’ரஜினிகாந்தின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்’’ - தொல். திருமாவளவன்

’’ரஜினிகாந்தின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்’’ - தொல். திருமாவளவன்

Sinekadhara

‘கட்சி தொடங்கப்போவதில்லை‘ என்ற ரஜினிகாந்தின் அறிவிப்பு குறித்து திருமாவளவன் தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார். 

வரும் 31-ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றுக்கூறிய ரஜினிகாந்த் தற்போது ‘கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், "கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசியபோது, ‘’நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். அவருடைய உடல்நலம் மிக முக்கியமானது. ஏற்கெனவே நான் சொன்னபடி, அவர் உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதே முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது, கட்சி தொடங்குவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லையென்றும், அரசியல் பணியாற்றுவதில் தனக்கு ஆர்வம் இருக்கிறது என்றும், ஆனால் அதற்கு உடல்நலம் ஒத்துழைக்குமா என தெரியவில்லை என்றும் தயக்கத்தோடு கூறினார்.

அந்தவகையில், இன்று உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். தன்னுடைய ரசிகர்களையும், உடன் பயணிப்பவர்களையும் ஏமாற்ற விரும்பவில்லை என்று துணிச்சலாகக் கூறி முடிவெடுத்திருப்பது வரவேற்கக்கூடியது. அதேசமயம், ரஜினிகாந்தின் இந்த முடிவு பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு மட்டும்தான் பெரிய ஏமாற்றத்தைத் தரும். மற்றபடி இதனால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை’’ என்று கூறினார்.