செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
சென்னை அம்பத்தூரில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று (மார்ச் 19) இரவு நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“கடந்த 2019ல் உருவான இந்த (I.N.D.I.A.) கூட்டணி, இந்த அளவிற்கு நீடித்து இருப்பதற்கு ஸ்டாலின்தான் காரணம். அண்ணாமலை திறந்த கதவிற்கு யாரும் வரவில்லை. அதனால் அவர் பாமகவை கடத்தி வந்து விட்டார். அண்ணாமலைக்கு ஆளுமை இல்லை. திமுக கூட்டணி தலைவர் ஆளுமை உள்ளவர். அதனால்தான் இந்தக் கூட்டணி கட்டுக் கோப்பாக உள்ளது. I.N.D.I.A. கூட்டணியில் விசிக இருப்பதற்கு காரணமும் ஸ்டாலின்தான். I.N.D.I.A. கூட்டணிக்கு ரூட் க்ளியர். கண்ணுக்கு எட்டியவரை எங்களுக்கு எதிரிகளே இல்லை. மோடி வித்தை காட்டுகிறார்.
வட இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல் பிரசாரம் விரைவில் நடைபெறும். மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அவரின் ஜம்பம் பலிக்காது. சரத்குமாருக்கு சமூக வாக்குகளும் இல்லை. அவர் மட்டுமல்ல, அந்தக் கூட்டணியில் இருபவர்கள் யாரும் வெற்றி பெறப் போவது இல்லை. தோற்கப் போகிறோம் என்று மோடிக்கும், பாமகவிற்கும் நன்கு தெரியும். தோற்பதற்காகத்தான் 10 சீட்டு. தாமரைக்கு ஒரு ஒட்டு கூட கிடையாது. பாமகவின் ஒட்டு பாஜகவிற்கு விழும் பாவம். எடப்பாடியை திட்டம் போட்டுதான் மோடியும் அமித்ஷாவும் கழட்டி விட்டு விட்டார்கள். அதேபோல் பாமகவை மிரட்டி கூட்டணியில் இணைத்துள்ளனர்.
வாக்கு வங்கியை உருவாக்குவதுதான் பாஜகவின் எண்ணம். திமுக பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளால்தான் ஆட்சியில் உள்ளது. இதை மடை மாற்றம் செய்ய நினைக்கிறார்கள். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. மோடியை நாட்டை, வீட்டை விட்டு அகற்றுவோம்” என்று திருமாவளவன் பேசினார்.