விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் PT WEB
தமிழ்நாடு

“கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் மாஃபியா கும்பல் இருக்கின்றது; அரசு இதை செய்யணும்” - திருமாவளவன்

PT WEB

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அருந்தியதாக 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சியில் 27 பேரும், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், சேலத்தில் 15 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்தது. இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளச்சாராயம் மரணம்

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கள்ளக்குறிச்சியில் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்ற விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை..

அதைத்தொடர்ந்து புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “கள்ளச்சாராய விற்பனையில் பிண்ணனியில் மாஃபியா கும்பல் இருக்கின்றது. மெத்தனால் அவ்வளவு எளிதாக கிடைக்கும் பொருள் அல்ல, ஆனால் கள்ளச்சந்தையில் விற்பனையாகின்றது. டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுவை விட கள்ளச்சாராயம் மலிவாக இருப்பதால் அதிகம் விற்பனை ஆகின்றது.

அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை, திறந்தவெளியில் பட்டப்பகலில் விற்பனையாகின்றது. கள்ளச்சாராய விற்பனைக்கூட ஏலம் விடப்படும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

கள்ளச்சாராயம் மரணம்

இந்த துயரச்சம்பவத்தை கண்டிக்கின்ற வகையிலும் இதில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முழு மதுவிலக்கு ஒன்று தான் இதற்கு தீர்வு என்பதை உணர்ந்து மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வருகின்ற 24ம் தேதி சென்னையில் எனது தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்” என தெரிவித்தார்.

நம்பிக்கையை பெறவேண்டுமானால் நேர்மையன புலன் விசாரணை வேண்டும்!

மேலும் பேசிய அவர், “இந்த சம்பவத்தில் அரசு உடனடியாக எதிர்வினையாற்றி உள்ளது. இவைகள் சற்று ஆறுதலை அளித்தாலும் அதிகாரிகளின் உடந்தையோடு நடந்து இருக்கின்றது என்பதை பொதுமக்களே பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசு இதில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் மரணம்

எதிர்கட்சிகள் சி.பி.ஐ விசாரணை கோருவதற்கு இந்த அரசின் மீது நம்பிக்கையற்ற நிலையில் உள்ளார்கள், நாங்கள் அரசின் மீது நம்பிக்கையில் இருக்கின்றோம். அரசு சரியான புலன் விசாரணை செய்ய வேண்டும், அதில் எந்தவித பாரபட்சமும் கூடாது. அரசுக்கு நல்ல பெயர் வேண்டுமானால், மக்களின் நம்பிக்கை பெற வேண்டுமானல் அல்லது இருக்கின்ற நம்பிக்கையை தக்கவைக்க வேண்டுமானால் நேர்மையான புலன் விசாரணை நடத்தி, ஆணிவேர் வரையில் ஆராய்ந்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.