தமிழ்நாடு

’’மக்கள் ஒருவரை தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல; அண்ணாமலை விரும்பினால்...’’ - திருமாவளவன்

’’மக்கள் ஒருவரை தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல; அண்ணாமலை விரும்பினால்...’’ - திருமாவளவன்

Sinekadhara

தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில், மரபு அடிப்படையில், உழைக்கும் மக்கள் ஒருவரை தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பப்பட்டால் அவர் தோளில் சுமக்கட்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். 

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவையின் சார்பில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொது மேலாளர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு தேவை, ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை உடனே துவங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றது.

இந்த அறப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் விவகாரத்தில், மனிதாபிமான அடிப்படையில், மரபு அடிப்படையில், ஒருவரை உழைக்கும் மக்கள் தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விருப்பப்பட்டால் அவர் தோளில் சுமக்கட்டும்.

விசாரணைக் கைதி விக்னேஷ் உள்ளிட்ட 3 மரணங்களில் தவறு செய்தவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மரணங்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியவை. இதுபோன்ற மரணங்கள் இனி நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இதற்கென தனி விசாரணை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்.

இசைஞானி இளையராஜாவிற்கு பின்னால் சங்கப்பரிவாரத்தினர் இருப்பதாகவே நான் கருதுகிறேன். இசைஞானி மீதும் அவர் சகோதரர் மீதும் பரிதாபப்படுகிறேன். அபேத்கரை ஒப்பிடலாம். ஆனால் யாரோடு ஒப்பிடுகிறோம் என்பது முக்கியம். மோடிக்கு நேர் எதிர் சிந்தாந்தத்தைக் கொண்ட தலைவர் அம்பேத்கர். தலித்துகளும் பழங்குடிகளும் இந்துக்கள் இல்லை என்கிறார் அம்பேத்கர். இதற்கு பாஜகவின் பதில் என்ன? நீட் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதை வரவேற்கிறோம். ஆனால் குடியரசுத்தலைவர் ஒப்புதல் கிடைக்குமா? எவ்வளவு காலம் ஆகும்? என தெரியவில்லை" என்றார்.