தொல் திருமாவளவன் கோப்புப்படம்
தமிழ்நாடு

“சாதி ஆதிக்கத்திற்கும், சனாதன ஆதிக்கத்திற்கும் எதிரான சமத்துவக் குரல்தான் மாமன்னன்” - MP திருமாவளவன்

webteam

சென்னை அம்பத்தூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், “சனாதனத்தின் நட்சத்திரம் வள்ளலார் என கூறியவர், தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் சனாதனம் என்று திரிபுவாதம் கருத்துகளை பரப்புகிறார்.

governor rn.ravi

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு இத்தகைய அரசியலை அவர் தொடர்ந்து விதைத்து வருகிறார். இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சமத்துவ முழக்கமாகும், உலகம் தழுவிய அளவில் சமத்துவத்தை போதிக்கும் மகத்தான முழக்கமாகும். அதனை சனாதனத்துடன் பொருத்திப் பேசுவது ஏற்புடையதல்ல. 'சனாதனத்தில் பாகுபாடு இல்லை. தீண்டாமை இல்லை' என்று அப்பட்டமான பெய்யை அவிழ்த்து விட்டுள்ளார் ஆளுநர். சனாதனத்தில் பாகுபாடு இல்லை, தீண்டாமை இல்லை என்றால் இன்றைக்கு இந்திய சமூகத்தில் குறிப்பாக இந்து சமூகத்தில் உள்ள பாகுபாடுகளுக்கு எது காரணம்? யார் காரணம்? வர்ணாஸ்ரம தர்மம் என்பது எதில் இருந்து உருவானது? மனுஸ்மிருதி யார் உருவாக்கியது? எந்த கோட்பாட்டில் உருவாக்கியது?

பெண்களை படிக்கக் கூடாது என அவர்களை பால்ய விவாகத்தில் உட்படுத்தி அவர்களை கொடுமை படுத்தியது எந்த கோட்பாடு? காரணம் தீண்டாமை இந்த மண்ணில் நிலைபெற்று இருகின்றது. அக்ரஹாரம், சேரி , ஊர் தெரு, குப்பம் என வேறுபட்டுள்ளது. வாழிடங்கள் பிளவுபட்டுள்ளன. இதற்கெல்லாம் யார் காரணம்? சனாதனம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க ஆளுநர் தயார் என்றால் விடுதலை சிறுத்தை கட்சியும் விவாதிக்க தயாராக உள்ளது.” என்றார்.

தொடர்ந்து மாமன்னன் படம் குறித்து அவர் பேசுகையில், “சாதி ஆதிக்கத்திற்கும், சனாதன ஆதிக்கத்திற்கும் எதிரான ஒரு சமத்துவ குரல் தான் மாமன்னன்” என்றார்.

மாமன்னன் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள எம்.பி திருமாவளவன், “சமூகநீதிக்கும் சாதிஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச்சித்திரமே இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன். சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித்தட்டிக் இறுகிக் கிடக்கிறது. அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன்.

இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள்” என்றுள்ளார்.