கடந்த மாதம் (அக். 27 ஆம் தேதி) நடந்த தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய அக்கட்சித்தலைவர் விஜய், ’தவெகவோடு சேர்ந்த அரசியல் களம் காணும் கட்சியினருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு’ என்பது குறித்தான கருத்துக்களை பேசியிருந்தார்.
விஜய்யுடன் சட்டமன்றத் தேர்தலில், விசிகவும் சேர்ந்து களம் காண வாய்ப்புள்ளதா? என்று இணையத்தில் நெட்டிசன்கள் பேசிக்கொள்ளும் அளவிற்கு விஜய்யின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலையே கிளப்பியது.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன், ”அவரது உரையில் அதிகம் திமுக எதிர்ப்பு நெடி வீசுகிறது. அவரது ஒட்டுமொத்த உரையின் சாராம்சமும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் அரசியலை எதிர்ப்பதாக இருக்கிறது..” என்றெல்லாம் கூறி கடும் விமர்சனத்தை விஜய்க்கு எதிராக முன்னிறுத்தி இருந்தார்.
இதற்கிடையேதான், அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அம்பேத்கர் பற்றிய நுால் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட... தவெக தலைவர் விஜய் அதை பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்றும் கடந்த வாரம் தகவல் வெளியாகி ஆளும் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்தநிலையில், இன்று இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர், ”அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நாங்கள் பங்கேற்க இசைவளித்து கிட்டதட்ட ஓராண்டு ஆகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியே புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளின் போது, இந்த புத்தகம் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்திருந்தால், அதை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் மட்டுமல்ல, ராகுல் காந்தியையும் அழைப்பதாக திட்டமிட்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார்கள். ஆகவே, இந்த புத்தக வெளியீட்டு விழா இப்போது முடிவானது அல்ல..
இப்பொழுது ஒரு சில வாரங்களுக்கு முன்பு, தவெக மாநாடு நடைபெறுவதற்கு முன்பு, ’விஜயையும் அழைக்க திட்டமிட்டிருக்கிறோம், அவர் வருவார்’ என்ற தகவலை விழாக்குழுவினர் தெரிவித்தார்கள். ரஜினியும் அதில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்கள். இப்படித்தான் அது சொல்லப்பட்டது. நாங்களும் இசைவளித்திருந்தோம்.
இப்போது, விஜய் அவர்கள் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து பேசி, இது குறித்து முடிவு செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.