திருமாவளவன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடியில் தொடர்ந்து கொடுமைகள் நடக்கின்றன”- விசிக தலைவர் திருமாவளவன்

“ஒரு வருடத்தில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் 30 முதல் 40 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகள் ‘வன்கொடுமை பகுதியாக’ அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது” - விசிக தலைவர் திருமாவளவன்

PT WEB

கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை சக மாணவர்கள் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாணவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான தொல் திருமாவளவன். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் சென்றடைந்தார் அவர்.

‘எது பேசினாலும் எதிர்க்கட்சிகளை வசைப்பாடுகிறார் பிரதமர்’

அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “உருவான நாளிலிருந்தே, INDIA கூட்டணி பாஜகவினருக்கு அடி வயிற்றில் புளியைக்கரைக்கிறது. பிரதமர் பயந்து போய் இருக்கிறார்.

PRIME MINISTER

எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என கனவில்கூட அவர் நினைத்திருக்க மாட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை என்ற எண்ணத்தோடு இருந்தார். அனைத்து எதிர்க்கட்சியும் சேர்ந்து INDIA என்ற கூட்டணி அமைத்தது காலத்தின் தேவையாக இருக்கிறது. இந்த கூட்டணி உருவான நாளில் இருந்து பாஜக, ஆர்எஸ்எஸ் வாய்க்கு வந்தபடி பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எது பேசினாலும் எதிர்க்கட்சிகளை வசைப்பாடி கொண்டிருக்கிறார் பிரதமர்.

‘அதே இந்து மக்கள் பிரதமரை விரட்டி அடிக்கப் போகிறார்கள்’

2.15 மணி நேரம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதில் பேசினார் பிரதமர். அவர் என்ன பேசினார் என ஒரு ஆங்கில நாளிதழ் கிண்டலடித்து பேசியது. அதில் முழுக்க ‘Blah Blah Blah’ என்பது மட்டுமே முழுக்க முழுக்க இருந்தது. ஒரு பிரதமரை இந்த அளவுக்கு எந்த ஊடகமும் நாட்டில் கேலி செய்திருக்க முடியாது.

‘நாடாளுமன்ற அவையில் பிரதமர் ஒன்றுமே பேசவில்லை’ என ஊடகம் கேலி செய்யும் நிலையில்தான் பிரதமர் உள்ளார். அவரின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டு இருக்கின்றன. எந்த இந்து மக்களின் ஒட்டு வங்கியை நம்பி பிரதமர் இருந்தாரோ அதே இந்து மக்கள் அவரை விரட்டி அடிக்கப்போகிறார்கள்.

‘நாங்குநேரி சம்பவம் வேதனையளிக்கிறது!’

நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்கும் ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்கும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. பள்ளி சிறுவர்கள், கல்லுரி மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். ஜாதி, மத நச்சு கருத்துகளை மாணவ மாணவிகளிடயே சிலர் பரப்பி வருகின்றனர். இந்த சாதிய மதவாத அமைப்புகளை கண்காணித்து அவர்களை கட்டுபடுத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

நாங்குநேரி

இதற்காக வழக்கறிஞர் சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் நிலவுகிற பிரச்னை, பாகுபாடு குறித்தும் அதை தடுப்பது குறித்தும் அவர்கள் விரிவாக வழிகாட்டுதலொன்று தர வேண்டும்.

அண்ணாமலை நடைபயணம் குறித்து...

ANNAMALAI

“ஊடகம் நம் பக்கம் இருக்க வேண்டும் என நினைத்து அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். தம்மை பற்றிதான் எல்லோரும் பேச வேண்டும் என்ற விளம்பர உலவியலுக்கு அவர் ஆளாகி உள்ளார். அது ஒரு மேனியா என்று தான் சொல்ல வேண்டும். இந்த நடைபயணம் எந்த தாகத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.

‘சாதி பெருமைகளை பேசுவது தடுக்கப்பட வேண்டும்’

தொடர்ந்து மாணவரை சந்தித்த பின்னரும் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன். அப்போது அவர் பேசுகையில், “பாதிக்கப்பட்ட மாணவி வீடு திரும்பும் நிலையில் உள்ளார். மாணவன் சின்னதுரைக்கு 21 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. 3 பேர் அரிவாளால் மாறி மாறி வெட்டி உள்ளனர். மாணவர் சின்னதுரை இன்னும் சில நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டி உள்ளது.

தமிழக அரசு சிறப்பான மருத்துவ உதவிகளை செய்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் நச்சுகளை பரப்புவது புதிதல்ல. ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் இந்த வேலையை செய்து வருகின்றனர். இளம் தலைமுறையிடையே இதுபோன்ற சாதி பெருமைகளை பேசுவது, வெறுப்பு அரசியலை பேசுவது போன்றவற்றை தடுக்க வேண்டும். இதுபோன்ற சக்திகளால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களிடம் நச்சுகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் இந்த குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். தாய் பாதுகாப்பில் மட்டுமே வளரும் இந்த குழந்தைகளுக்கு சரியான கல்வி வழங்கி அரசின் சார்பில் வீடு ஒன்றையும் கட்டி கொடுக்க வேண்டும்.

‘சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில்...’

இந்த கோரிக்கைகளை நாளை நேரில் முதல்வரை சந்தித்து தெரிவிக்க உள்ளேன். ஒரு வருடத்தில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் 30 முதல் 40 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். நாங்குநேரி, வள்ளியூர் பகுதிகள் ‘வன்கொடுமை பகுதியாக’ அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சாதியின் பெயரால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில் இந்த கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.

தீவிரவாத பிரிவுகளை கண்காணிக்க க்யூ பிராஞ்ச் என தனி உளவு பிரிவு இருப்பது போல் சாதி பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு துவங்க வேண்டும். நாங்குநேரியில் மாணவன் மீது நடந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வரும் 20 ம் தேதி மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் என் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்”