தமிழ்நாடு

அனுமதியின்றி சாலையில் வைக்கப்பட்ட வெடி... பெண் கூலித்தொழிலாளிக்கு 2 கால்களிலும் பாதிப்பு

அனுமதியின்றி சாலையில் வைக்கப்பட்ட வெடி... பெண் கூலித்தொழிலாளிக்கு 2 கால்களிலும் பாதிப்பு

webteam

திருக்கோவிலூர் அருகே வெடி விபத்தில் சிக்கியவருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அஞ்சலை (30). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் ஆறுமுகம் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனது தாய் வீட்டில் தங்கி தனியார் உணவகத்தில் தினக்கூலி பணியாளராக வேலை செய்து வருகிறார் அஞ்சலை.

இன்றும் இதேபோல குச்சிபாளையம் கிராமத்தில் தனது தாய் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள உணவகத்தில் அன்றாட பணிக்கு சென்றுள்ளார். அந்த வழியில் கடலூர் - சித்தூர் நான்கு வழி சாலை விரிவாக்கம் பணியில் நெடுஞ்சாலை துறை சார்பில் வேலைகள் நடைபெற்று வருகிறது. திருக்கோவிலூர் நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு இடங்களில் புதிய பாலம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் ஒருபகுதியாக குச்சிபாளையம் கிராமத்தில், பாலம் கட்டுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர். ஆனால் அடியில் சிறிதளவு பாறை இருந்துள்ளதால், அந்த பாறையை வெட்டி எடுப்பதற்கு வெடி வைக்க அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் இதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் காவல் நிலையத்தில் அனுமதி பெறப்படவில்லை என சொல்லப்படுகிறது. அனுமதியே பெறாமல் இன்று காலை வெடி வைத்துள்ளனர்.

இதில் வெடித்து சிதறிய பாறாங்கல், நடந்து சென்ற அஞ்சலையின் கால்கள் மீது விழுந்து இரண்டு கால்களும் முறிந்து அவர் வலியால் துடிதுடித்துள்ளார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், உடனே அஞ்சலையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

இதுகுறித்து கூறும் குச்சிப்பாளையம் கிராம மக்கள், “நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியத்துடன், முன்அனுமதி பெறாமல் முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் வெடி வைத்துள்ளனர்” குற்றஞ்சாட்டியுள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ள மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.