தமிழ்நாடு

“ஆபாசப் படம் பார்த்த பட்டியலில் உங்கள் பெயர்..! ” - இளைஞர்களை மிரட்டும் போன் கால்..!

webteam

திருச்செந்தூரில் ஆபாச படம் பார்ப்பதாக 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காவல்துறை எனக்கூறி போன் அழைப்புகள் வந்துள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாட்டில் அதிகரித்து வருவதால், சீறாரை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச படங்களை பார்ப்பவர்களின் பட்டியலை தயாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் ஆபாச படம் பார்ப்பவர்களை போலீஸார் கைது செய்து வருவதாக பலரும் சித்தரித்து பரப்பி வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவில் ஏராளமான ஆபாச தளங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தடை மீறி செயல்படும் சில தளங்களே சிறார் ஆபாச படங்களை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்செந்தூரில் ஆபாசம் படம் பார்த்ததாக கூறி, இளைஞர்களின் தொலைபேசி எண்ணிற்கு மதுரை காவல் துறையிலிருந்து பேசுவதாக அழைப்பு வந்ததுள்ளது. அத்துடன் ஆபாசம் படம் பார்த்ததற்கு ரூ.5000 அபராதம் கட்ட வேண்டும் என்றும், இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு இரண்டு நாட்களில் காவல்துறையினர் வர கூடும் என்றும் மிரட்டியுள்ளனர். மேலும் பெற்றோரிடமும், கல்லூரி நிர்வாகத்திடமும் புகார் தெரியப்படுத்துவோம் கூறியதாக தெரிகிறது. இந்த போன் அழைப்புகளில் போது, காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்று 20க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு போன் அழைப்புகள் வந்துள்ளன. இதனால் அவர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். அதேசமயம் இளைஞர்களிடம் பேசும் நபர்கள் உண்மையிலேயே காவல்துறையை சேர்ந்தவார்களா ? அல்லது பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவார்களா ? என விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.