தன் பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்று பாலினத்தவர்களுக்கான பேரணி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
தன் பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் மாற்றுபாலினத்தவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கு சமூக அந்தஸ்து வேண்டியும் வானவில் சுயமரியாதை அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 10-ஆவது ஆண்டாக நடைபெற்ற பேரணியில், தாங்கள் பல தரப்பட்ட உணர்வுகளை கொண்டவர்கள் என்பதை உணர்த்திடும் வகையில், பேரணியில் சென்றவர்கள் பல வண்ண ஆடைகளை அணிந்து நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் பேரணியில் மாற்றுபாலினத்தவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 377 என்ற சட்டப்பிரிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு ஆதரிப்பதற்கு முன், நம்மை சுற்றி உள்ள மாற்றுபாலினத்தவர்களை நாம் அரவணைத்து அவர்களுக்கான உரிமையை வழங்கிட வேண்டும் எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். பேரணியில் பங்கேற்ற மாலினி கூறும்போது, “ நடை, உடையில் ஆண் ஏது..? பெண் ஏது..? எல்லா உணர்வுகளும் எல்லோருக்கும் சொந்தமானது. புறக்கணிக்கப்பட்டோரின் கொண்டாட்ட நாள் இன்று” தெரிவித்தார்.