தமிழ்நாடு

ரஜினிக்கு எதிரான மனுக்களை வாபஸ் பெற்றது திராவிடர் விடுதலை கழகம்

ரஜினிக்கு எதிரான மனுக்களை வாபஸ் பெற்றது திராவிடர் விடுதலை கழகம்

webteam

நடிகர் ரஜினிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றதையடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைக்கு வழிவகுத்தது. நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 3 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சென்னையில் இருந்து உமாபதி, கோவையில் இருந்து நேருதாஸ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ரஜினி பெரியார் குறித்து அவதூறாக பேசியதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் நடராஜன், “பெரியார் மிகப்பெரிய தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை ரஜினி தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது. அவர் படித்த தகவல்களிலிருந்து அவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து புகார் அளித்த இரண்டே நாளில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். புகார் அளித்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் எஸ்பி அல்லது ஆணையரிடம் புகார் அளிக்க வேண்டும். அங்கும் நடவடிக்கை இல்லை என்றால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாட வேண்டும். அந்த தீர்ப்பில் திருப்தி இல்லையென்றால் தான் உயர்நீதிமன்றத்தை நாட முடியும் என்ற விதி உள்ளது. விதியை பின்பற்றாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர்” என வாதாடினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பெரியார் ஒரு மிகப்பெரிய தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை பதிவு செய்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதையடுத்து மனுக்களை வாபஸ் பெறுவதாக திராவிடர் விடுதலை கழகம் தெரிவித்தது. மனுக்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன