premalatha, vijayakanth, vijayaprakaran pt
தமிழ்நாடு

"விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து ஒரு வாய்ப்பு தாருங்கள்".. உருக்கமாக பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

புரட்சிக் கலைஞருக்கு ஒரு வாய்ப்பை தராமல் விட்டோமே என ஏங்கும் மக்களுக்கு, விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து கேப்டனின் மறு உருவமாக எண்ணி, அவருக்கு நீங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

PT WEB

செய்தியாளர் - நவநீத கணேஷ்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் விஜய பிரபாகரனின் அம்மாவுமான பிரேமலதா விஜயகாந்த், பந்தல்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “உங்களுக்காக விஜயபிரபாகரனின் குரல் டெல்லியில் ஒலித்து, இந்த தொகுதிக்கு மக்களுக்கும் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை செய்ய உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். நமது மக்களுக்காக உழைக்க அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை தர வேண்டும்.‌ விஜயபிரபாகரன், இந்த தொகுதியை எல்லாவிதத்திலும் முன்னேற்றுவார் என்பதை உறுதியாக கூறுகிறேன். புரட்சிக் கலைஞருக்கு ஒரு வாய்ப்பை தராமல் விட்டோமே என ஏங்கும் மக்களுக்கு, விஜய பிரபாகரனை கேப்டனாக நினைத்து கேப்டனின் மறு உருவமாக எண்ணி, அவருக்கு நீங்கள் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் இந்த தொகுதி முழுக்க, அனைத்து பணிகளையும் செய்வார். இந்த பந்தல்குடியில் விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை ஒழிக்க, அதை வனவிலங்குகள் பட்டியிலிருந்து நீக்க விஜயபிரபாகரன் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்.‌ அதற்கான பாதுகாப்பை உங்களுக்கு நாங்கள் ஏற்படுத்துவோம். இப்பகுதியிலே அதிகமாக விளையும் மல்லிகை பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க சென்ட் பேக்டரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தொகுதிக்கு வேண்டிய எல்லா திட்டங்களையும் செய்து நமது விருதுநகர் தொகுதியை முதன்மையான தொகுதியாக கொண்டுவந்து, படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அனைத்தையும் கொடுத்து இந்த தொகுதியை மேம்படுத்துவார். விஜயபிரபாகரனுக்கு வாய்ப்பு தருவீர்களா, முரசு சின்னத்திற்கு வாய்ப்பு தருவீர்களா. அவர் அப்படியே கேப்டன் மாதிரிதான்.

படிச்சவர், இளைஞர், அறிவாளி பல சவால்களை இந்த வயதில் சந்தித்தவர். கூடிய விரைவில் விருதுநகர் தொகுதியில் உங்கள் ஆசீர்வாதத்துடன் அவருக்கு திருமணம் நடக்கும்.‌‌ உங்களோடு நிச்சயம் இருந்து அத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்” என்று கூறி முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் பிரேமலதா.