தமிழ்நாடு

மாம்பலத்தில் கொள்ளை... எழும்பூர் ரயில் நிலையத்தில் தூக்கம் - வசமாக சிக்கிய திருடர்கள்

மாம்பலத்தில் கொள்ளை... எழும்பூர் ரயில் நிலையத்தில் தூக்கம் - வசமாக சிக்கிய திருடர்கள்

PT

சென்னை மாம்பலத்தில் வீடு புகுந்து நகையை கொள்ளையடித்த நபர்கள் கஞ்சா போதையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தூங்கியபோது சிக்கினர்.

சென்னை, மாம்பலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு. கடந்த 21 ஆம் தேதி , இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 7 சவரன் தங்க நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மதுபோதையில் 2 பேர் படுத்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்தபோது அதில், 7 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தியபோது பிடிபட்டவர்கள் அம்பத்தூர் அருகே மன்னணூர் பேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் சையது அப்துல் கரீம் (37), அவரது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் பாடியைச் சேர்ந்த குமார் (29) என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவரும் மாம்பலத்தில் கணேஷ்பாபு வீட்டில் கொள்ளையடித்து அந்த நகையுடன் மது போதையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் படுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் மாம்பலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர் விசாரணை நடக்கிறது. இவர்கள் மீது ஆந்திராவிலும் மற்றும் தமிழகத்திலிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.