தமிழ்நாடு

புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசையை அனுப்பியுள்ளனர்: கே.எஸ்.அழகிரி

புதுச்சேரி அரசை சிதைக்கவே தமிழிசையை அனுப்பியுள்ளனர்: கே.எஸ்.அழகிரி

Veeramani

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியை செயல்படாமல் தடுக்க கிரண் பேடி அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது புதுச்சேரி அரசை சிதைக்க தமிழிசையை அனுப்பியுள்ளனர் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டிருக்கிறார். 

மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி, “எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியாத மோடி அரசு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை பெற வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கும். பாரதிய ஜனதா அரசிற்கு பொருளாதாரம் பற்றி தெரியாமல் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைத்து வருகிறது” என தெரிவித்தார்.

புதுச்சேரி விவகாரம் குறித்து பேசிய அவர் “பாண்டிச்சேரியில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாரயணசாமியை  செயல்படாமல் தடுக்க கிரண் பேடி அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது பாண்டிச்சேரி அரசை சிதைக்க தமிழிசையை அனுப்பியுள்ளனர். இரு பெண்களை அனுப்பி வைத்து புதுச்சேரி அரசை சிதைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா அரசு மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் கிரண்பேடி பதவி நீக்கம் என்ன காரணம்? அப்படியென்றால் கிரண்பேடி தவறு செய்தார் என ஒத்துக்கொள்கிறார்களா?. புதுவை மக்கள் கிரண்பேடிக்கு எதிராக திரண்டெழுந்துள்ளார்கள் என்பதால் மக்களின் கோபத்தை கட்டுப்படுத்தவே தமிழிசையை நியமித்துள்ளார்கள். பாஜக அரசு, புதுச்சேரியில் அரசின் உயிர் நாடியை அழிக்க நினைக்கிறார்கள்” எனவும் தெரிவித்தார்.