கிருஷ்ணகிரி அருகே நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று குழந்தைகளுடன் கணவன் - மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியை அடுத்துள்ள மஞ்சமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி - ரம்யா தம்பதியர். இவர்களுக்கு இந்துஜா (10), ஜெயஸ்ரீ (9), தங்க மயிலன் (2) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான ராமமூர்த்திக்கு, அப்பகுதியில் 30 சென்ட் நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது நிலத்துக்கு அருகே உள்ள அருணாச்சலம் என்பவர், ராமமூர்த்தியின் நிலத்தை தனக்கு விற்பனை செய்யுமாறு வலியுறுத்தி வருவதாகவும், இதன் காரணமாக நிலத்திற்கு செல்லக்கூடிய பாதையை அடைத்து தங்கள் இடத்திற்குச் செல்ல முடியாமல் இடையூறு செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.
இது குறித்து ராமமூர்த்தி கடந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி பாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அவர் தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருகை தந்த ராமமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது மனைவி ராம்யா மற்றும் தனது குழந்தைகள் மீது ஊற்றி திடீரென தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக செயல்பட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினார். நில அபகரிப்பு புகாரில் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.