தமிழ்நாடு

“நானும் எவ்வளவோ அனுசரித்து சென்றேன்..” - பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பேட்டி

“நானும் எவ்வளவோ அனுசரித்து சென்றேன்..” - பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பேட்டி

webteam

என்னை தரையில் அமரவைத்து கூட்டம் நடத்தியது உண்மைதான் என தெற்குதிட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஷ்வரி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத்தலைவராக ராஜேஷ்வரி என்பவரும் துணைத்தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது , தலைவர் ராஜேஷ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை துணைத்தலைவர் மோகன் தரையில் அமர்த்தியதாக சமூக வலைதளங்களில் நேற்று புகைப்படம் ஒன்று வெளியாகியது.

இதுகுறித்து போலீசார், துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேஷ்வரி கூறுகையில், “பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட்டம் நடக்கும்போது நீ தரையில்தான் உட்கார வேண்டும். நீ எதையும் செய்ய வேண்டாம். நான்தான் எல்லாம் செய்வேன் என துணைத்தலைவர் சொல்வார். சரி என்று நானும் தரையில் அமர்ந்துதான் எல்லாவற்றையும் கேட்பேன். அவர்தான் எல்லாவற்றையும் அறிவிப்பார். கொடியேற்றும்போது கூட நான்தான் ஏற்றுவேன். நீ ஏற்றக்கூடாது என சொன்னார். பஞ்சாயத்தை நீ பார்க்கிறியா? அல்லது நான் பார்க்கட்டுமா என்று கேட்பார். சரி என்று நானும் எவ்வளவோ அனுசரித்து சென்றேன். இதெயெல்லாம் எதற்கு வெளிப்படுத்தனும் என்று நானும் எவ்வளவோ அனுசரித்து போனேன். ஆனால் அவர் ஓவரா பேசியுள்ளார். சரி இதுக்கு அப்புறம் நான் தலைவர் என்று எதற்கு உள்ளேன் என எண்ணிதான் இப்போது வெளிப்படுத்தினேன்” எனத் தெரிவித்தார்.