தமிழ்நாடு

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்!

webteam

குமரி மாவட்டத்தில் ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. 

 ‘குமரிக் குற்றாலம்’ என்று அழைக்கப்படுவது திற்பரப்பு நீர்வீழ்ச்சி. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திற்பரப்பு என்ற ஊரிலுள்ள ‘திற்பரப்பு நீர்வீழ்ச்சி’ குமரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று. திற்பரப்பு நீர்வீழ்ச்சியின் அடிப்பகுத்தில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. 

அதேபோல் கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் சிவன் கோயிலும் இருக்கிறது. கீழ்பகுதி வட்டமாகவும், மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. திற்பரப்பு அருவியிலிருந்து 5 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. இந்த அருவியில் குளிப்பதற்கு ஆண்களுக்கு ஆழமான பகுதியும், பெண்களுக்கு ஆழமற்ற பகுதியும் தனித்தனியாக இருக்கிறது. உடை மாற்றும் பகுதியும் தனியாக இருக்கிறது. இந்த அருவி தமிழ்நாடு சுற்றுலா துறையினால் பராமரிக்கப்படுகிறது. 

இந்த ஆறு காடுகளின் வழியாக பாய்ந்து வருவதால் பல மூலிகைகளின் குணம் தண்ணீரில் சேர்வதாக நம்பப்படுகிறது. கால்களிலுள்ள பித்தவெடிப்பு, மற்ற தோல் நோய்களையும் குணப்படுத்தும் தன்மை இதற்கு  இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குளிக்கிறார்கள். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு என்று தனியாக நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைச்சூழல் நிறைந்துள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். 

வாரத்தின் அனைத்து நாட்களிளும் குளிக்க அனுமதிக்கப்படும் இங்கு கூட்டத்திற்கு பஞ்சம் இருப்பதில்லை. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் ஒரு வாரகாலமாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்ததுடன் சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரப்பர் மரங்களில் இருந்து பால்வடிக்கும் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது.