தமிழ்நாடு

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு-சசிகலாவை உடனடியாக சந்தித்த டிடிவி!

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு-சசிகலாவை உடனடியாக சந்தித்த டிடிவி!

webteam

2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் ஷமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்த போதும், அது நடக்கவில்லை எனவும், 2012-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றிருந்தாலும், அதற்கு பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா இறந்த நாள் மற்றும் இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4-ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50 மணிக்குள் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்லதால் ஜெயலலிதாவின் மரண அறிவிப்பு திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதோடு, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை என்றும் ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை திநகரில் உள்ள இல்லத்தில் அவரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆணையத்தின் அறிக்கையின் நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. எய்ம்ஸ் அறிக்கையை ஆணையம் நிராகரித்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஆணையம் அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டது. அதனால் இந்த அறிக்கையிலும் அரசியல் இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அவர் நோய்வாய்ப்பட்டு தான் இறந்தார். ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளை சட்டரீதியாக சசிகலா எதிர்கொள்வார்.

ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மிகவும் சிறப்பாக செயல்பட கூடியவர் எல்லா அரசாங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது ஆணையம். இப்பொழுது தமிழக அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை தான் பார்க்க வேண்டும், எல்லாவற்றையும் எதிர்கொள்வோம். தேவிதார் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடத்திருப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையேன் சமர்ப்பிக்காத காரணம் என்ன?” என்று கூறினார்.

மேலும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் முக்கிய தகவல்கள் குறித்து அறிய இந்த வீடியோ தொகுப்பை பார்க்கவும்..

- ரமேஷ், சுபாஷ் பிரபு, ச.முத்துகிருஷ்ணன்