காஞ்சிபுரம் அருகே இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் பாலாற்று தண்ணீரில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
மக்கள் வாழ்வதற்கு வீடுகள் உள்ளன. உணவுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. குடிப்பதற்கு தண்ணீர் உள்ளது. ஆனால் வாழ்ந்து மறைந்த பிறகு அவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இருந்தும் அதற்கு செல்ல பாதை இல்லை. இப்படி தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அதுபோல உள்ள கிராமங்களில் யாராவது இறந்துவிட்டால், அந்த உடலை அடக்கம் செய்ய இறந்தவரின் உறவினர்கள் படும்பாடு சொல்லிமாளாது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வென்குடி என்ற கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளாக ஊரில் யாராவது இறந்து விட்டால் அவர்களது உடலை சுமந்து கொண்டு சுடுகாட்டுக்குச் செல்ல வழியில்லாமல் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் தனியார் நிலங்கள் வழியாக சென்று பாலாற்றில் இறங்கி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்து வந்தனர்.
இதையடுத்து மழை காலங்களில் ஆற்றின் வெள்ள நீரில் நீந்தி சென்று மனித உடல்களை அடக்கம் செய்துள்ளோம் என்று வேதனையோடு கூறும் ஊர்மக்கள். இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்படி ஒவ்வொரு முறையும் ஊரில் இறப்பு ஏற்படுகிறபோது சுடுகாட்டு பாதை இல்லாமல் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம் ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றனர்.