தமிழ்நாடு

’முன்னாள் முதல்வரின் ஊருக்கே இந்த நிலையா?’ - திருக்குவளை கிராம மக்கள் குமுறல்!

’முன்னாள் முதல்வரின் ஊருக்கே இந்த நிலையா?’ - திருக்குவளை கிராம மக்கள் குமுறல்!

webteam

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் மயானத்திற்கு செல்ல சாலையில்லாத அவலம்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேறும் சகதியுமாக விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்த்த நெற் பயிர்களின் நடுவில் தூக்கிச் சென்றனர். மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அந்த கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கிச் செல்வதால் பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் பாதிப்பதாகவும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் நிரந்தர சுடுகாடு கட்டடம் கூட இல்லாமல், கீற்று கொட்டகைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரியூட்டுவதாகவும், பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்துநின்று விடுவதால் நரி, நாய் உள்ளிட்டவை இழுத்துச் சென்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் மீண்டும் மறு சடங்குகள் செய்யும் துர்பாக்கிய நிலை நிலவுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டும் இவர்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தரவேண்டும் என்றும் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.