கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகளை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆளுநர் மாளிகைக்கு வருகை புரிந்தார். அப்போது தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார். பின் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிவந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...
"கேலோ இந்தியா விளையாட்டு விழாவை வெற்றிகரமாக தமிழகத்தில் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். திருக்குறளின் விடாமுயற்சி அதிகாரத்தை மேற்கோள்காட்டி பிரதமர் பேசியுள்ளார். நாளை ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். ஸ்ரீரங்கம் நிகழ்ச்சி முடிந்த பின் கம்பராமாயணம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து நாளை மறுநாள் ராமேஸ்வரம் செல்ல உள்ளார். எனவே நாளையும் நாளை மறுநாளும் தமிழகம் முழுவதும் ஆன்மிகப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் பிரதமர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளது பெருமையாக உள்ளது" என்றார்.
முன்னதாக அவர் பேசிய வார்த்தை ஒன்று சர்ச்சை ஆகி இருந்தது. அது குறித்து பேசுகையில், “கொங்குநாடு பத்திரிகையாளர் சந்திப்பில் வழக்காடு மொழியில் தான் பேசியுள்ளேன். நான் மிகவும் உணர்ந்து தெளிவாகதான் பேசி வருகிறேன். எந்த வார்த்தையை சொன்னாலும் அதில் பலர் வன்மத்தைக் கக்கியுள்ளனர். அண்ணாமலை பேசிய பேச்சில் பிரச்னை இல்லை பார்ப்பவர்களின் கண்களிலும் மனதிலுமே வன்மங்கள் நிறைந்துள்ளது., எனவே என்னுடைய பேச்சுக்கு நான் எங்கும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று விளக்கம் கொடுத்தார்.
அத்துடன், “பா.ஜ.க பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முதல் தலைமுறை வாக்காளர்களுடன் பிரதமர் டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக உரையாட உள்ளார். இது பாஜக நிகழ்வு அல்ல” என்றார்.