தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை - நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

rajakannan

மின் உற்பத்தி மற்றும் மின் ‌பகிர்மான கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்து கொண்டிருப்பதாக வரும் தகவல்‌கள் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், தமிழகத்தில் மின் வெட்டு எதுவும் இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

மின்சார தேவையை பூர்த்தி செய்ய காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவில்லை எனத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் மின்துறை செயலாளர் நஜிமுதீன், டான் ஜெட்கோ தலைவர் விக்ரம் கபூர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். தமிழகத்தில் தேவையான அளவிற்கு மின்சாரம் உள்ளது, மின் வெட்டு இல்லை என அவர்கள் விளக்கம் அளித்தனர்.

மேலும், “தமிழகத்தில் சூரிய, காற்றாலை மின் சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கலாம். உயர்மாடி கட்டடங்களில் சூரிய மின்சக்தி திட்டத்தை கட்டாயமாக்கலாம். வீடுகளில் சூரிய மின்சக்தியை கட்டாயமாக்கினால், தங்கள் தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியும்” என நீதிபதி கிருபாகரன் அறிவுரை வழங்கினார். 

நீதிமன்றத்தின் பரிந்துரைகள் குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, அக்டோபர் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி கிருபாகரன்.