பொறியியல் கலந்தாய்விற்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் முன்பின் தெரியாத நபர்களிடம் சான்றிதழ், பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்காக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், கலந்தாய்வில் கலந்து கொண்டு, தங்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையின்படி, தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.
மிகவும் வெளிப்படையாக நடைபெறும் கலந்தாய்விற்கு பிறருடைய உதவியோ, சிபாரிசோ தேவையில்லை என்றும் முன்பின் தெரியாத நபர்களிடம், சான்றிதழ்களையோ, பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
உண்மை நிலையை மறைத்து, தவறான தகவல்களை கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேரும்படி வற்புறுத்தவோ, சான்றிதழ்களை தரும்படி கட்டாயப்படுத்தினாலோ பல்கலைக்கழகத்தில் இயங்கும் விசாரணை அலுவலகத்தில் தெரிவிக்கும்படி பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.