பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு பிறந்த குழந்தை உயிரிழந்ததை அடுத்து, அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் பிறந்த சிசு உயிரிழந்ததாக மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகர் மாங்காய் மண்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கூலி வேலை செய்யும் கரண் (25), சிவசத்தி (23) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், தற்போது கருவுற்ற சிவசக்தி 9ஆவது மாதம் பிரசவ வலி ஏற்பட்டு மக்கான் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிவசக்திக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் சற்று நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.
தாங்கள் மருத்துவமனைக்கு வந்த போது மருத்துவர்கள் யாருமே இல்லை, 1 மணி நேரமாக காத்திருந்தோம், முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவே பிறந்த குழந்தை உயிரிழந்ததாகவும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உயிரிழந்த சிசுவின் உடலுடன் உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் துறை, மருத்துவத்துறை மற்றும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலூர் தெற்கு காவல் நிலையத்திலும், வேலூர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனரிடமும் புகார் அளிக்கப்பட்டது. மேலும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து 2 மணி நேர முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.