தமிழ்நாடு

ஆளுமைகள் மறைந்த நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது – அண்ணாமலை பேச்சு

ஆளுமைகள் மறைந்த நிலையில் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது – அண்ணாமலை பேச்சு

kaleelrahman

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணமலை பேசினார்.

கோவை விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மகளிரணி மாநில நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

'பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மகளிரணியில் புதுமையான விஷயங்களை கொண்டு வந்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தமிழக மக்களுக்கு உள்ளது. இந்தியாவில் தமிழக மகளிரணி முதலிடத்திற்கு வர வேண்டும். அது தான் வானதி சீனிவாசனுக்கு பெருமை சேர்க்கும். அடுத்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய சரித்திர மாற்றத்தை இந்த அணி ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழகத்தில் ஆளுமைகள் மறைந்த பிறகு அரசியலில் மகளிருக்கு வெற்றிடம் அதிகமாக உள்ளது. சுத்தமான அரசியலை மகளிர் விரும்புகிறார்கள். மகளிர் தான் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். மத்திய அரசின் 90 சதவீத திட்டங்கள் மகளிர் நலனுக்காக தான் கொண்டு வரப்படுகிறது.

அரசின் வடிவமைப்பு மகளிரை மையமாக வைத்து தான் உள்ளது. மகளிர்கள் வாக்குச் சாவடியில் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளனர். மகளிரிடம் நம்பிக்கை இருக்கும் வரை மோடியை அசைக்க முடியாது' என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மகளிர் அணி மாநிலத் தலைவி உமாரதி, விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.