தமிழ்நாடு

முட்டை ஓட்டிலிருந்து உர தயாரிப்பு: தென்காசி நகராட்சி புது முயற்சி

webteam

குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து முட்டை ஓடுகளிலிருந்து உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தென்காசி நகராட்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் நெகிழி தடை மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்று நெகிழி பயன்பாடும் குறைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து முட்டை ஓடுகளிலிருந்து உரம் தயாரிக்கும் ஒரு புது முயற்சியை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தென்காசி நகராட்சி மேற்கொண்டு வருகிறது. உணவகம், வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைக் கழிவுகளில் இருந்து முட்டை ஓடுகளை பிரித்தெடுத்து அவைகளை சுத்தமாக கழுவி காயவைத்து பிறகு பொடியாக அரைத்து மிகச்சிறந்த உரமாக பயன்படுத்த தென்காசி நகராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த முட்டை ஓடுகளில் அதிக அளவு கால்சியம் சத்தும், புரதச்சத்தும் இருப்பதால் தோட்டங்களுக்கும் செடிகளுக்கும் ஆகச்சிறந்த உரமாக பயன்படும் என்று தெரிவிக்கின்றனர். தற்போது நகராட்சிக்குள் இருக்கும் சுமார் 50 கடைகளிலிருந்து மட்டும் முட்டை கழிவுகளை பிரித்து எடுத்து ஒரு முன்னோட்ட முயற்சியாக செய்து வருகின்றனர். 

இனிவரும் காலங்களில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கடைகள், வீடுகள் மற்றும் அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை கழிவுகளை பெற்று மறுசுழற்சி செய்து மக்களின் தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தற்போது முன்னோட்ட முயற்சியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவசமாக உரம் தயாரித்து வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இத்திட்டம் மேலும் விரிவடையும் நிலையில் ரசாயன உரத்திற்கு மாற்றாக கழிவுகளில் இருந்து இயற்கையான அதிக புரதச்சத்தும் கால்சிய சத்தும் நிறைந்த சுத்தமான உரம் கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.