செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் கல்லூரி கல்வி வளாகத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லூரி வளாகத்திற்குள் நேற்று இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டள்ளது.
இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜேஷ் கண்ணன் என்பதும், இவர், கம்மவார் கல்லூரியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்தவர் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக கொடுவிலார்பட்டி விஏஓ மதுக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் 448, 188, 294(b), 353, 506 (II) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள பழனிசெட்டிபட்டி போலீசார், ராஜேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.