செய்தியாளர்: சுரேஷ்குமார்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை, தேனி, திருச்சி, சென்னை உட்பட பல்வேறு காவல் ஆணையர் அலுவலகங்களில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குகளின் அடிப்படையில் அந்தந்த காவல் நிலையங்களில் சவுக்கு சங்கரை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தில் தேனி போலீஸ் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சவுக்கு சங்கரின் அலுவலகம் பூட்டி இருந்த நிலையில் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது அவர் தங்கியிருந்த அறையில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கஞ்சா வழக்கில் கைது செய்திருந்தனர். இதையடுத்து அவருக்கு கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கஞ்சா வியாபாரிகளுடன் அவருக்கு தொடர்பு எப்படி ஏற்பட்டது? கஞ்சாவை வாங்கி விற்பனை செய்தாரா? கஞ்சா கைமாறியது தொடர்பாக ஆவணங்கள் இருக்கிறதா? என்று சென்னை மதுரவாயில் உள்ள சவுக்கு சங்கர் இல்லத்திலும், தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் அதிரடியாக தேனி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.