செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி வீரபாண்டி அருகே, தேனி குமுளி சாலையில் ஆட்டோவும் இருசக்கர வாகனமும் லேசாக மோதியுள்ளது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கேரள பதிவு எண் கொண்ட ஆப்டோ என்பதை புரிந்து கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தனது கையில் வைத்திருந்த "வாக்கி டாக்கி"யில் "ஓவர் ஓவர்" என பேசியுள்ளார்.
அதோடு, ஆட்டோவில் வந்தவரிடம் தன்னை தேனி சிபிசிஐடி போலீஸ் என்று கூறி ஆட்டோக்கான ஆவணங்கள் சரியாக உள்ளதா எனக் கேட்டு ஆவணங்களை எடுத்து வரச் சொல்லி மிரட்டியுள்ளார். அந்த நேரத்தில், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் மப்டி யில் சென்ற ஒரிஜினல் போலீஸ், நிகழ்விடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்.
அப்போது அவர், ஒரிஜினல் போலீஸ் என்று தெரியாமல், அவரிடமே தன்னை சிபிசிஐடி போலீஸ் என்று அறிமுகம் செய்துள்ளார் அந்த வாக்கி டாக்கி நபர். அப்போது போலீஸ்காரர், நீங்கள் எந்த ஸ்டேஷன் என கேட்டுள்ளார். அதைக் கேட்டு மது போதையில் இருந்த "வாக்கி டாக்கி" போலீஸ் பம்மியுள்ளார். இதையடுத்து அவர்களை வீரபாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆட்டோவில் வந்தவர் இடுக்கியைச் சேர்ந்த சதீஷ் என்பதும், பெர்மிட் இல்லாமல் ஆட்டோவில் தேனிக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் எனக் கூறிய நபர், தேனி அல்லி நகரத்தில் மைக் செட் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வரும் கண்ணன் என்பதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.