தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவர் பாபு. கூலித் தொழிலாளியான இவருக்கு, மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி கிராமத்திலுள்ள பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்றிரவு மேக்கிழார்பட்டியில் நடைபெற்றது.
அப்போது நண்பர்களுடன் மது அருந்தி குடிபோதையில் இருந்த பாபு, ஒரு சிலரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குடிபோதையில் தகராறு செய்த அவர், அருகே இருந்த 60 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்துள்ளார்.
இந்த தகவலறிந்த கிராமத்தினர் உடனடியாக பாபுவை, கயிறு மூலம் மீட்க முயற்சித்தனர். ஆனால், நன்கு நீச்சல் தெரிந்த பாபு, மேலே வர மறுத்து கிணற்றிலேயே இருந்துள்ளார்.
இதையடுத்து ஆண்டிப்பட்டி காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாபுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், மீண்டும் பிடிவாதமாக மேலே வராமல் அடம்பிடித்துள்ளார். இதையடுத்து தண்ணீரில் விழுந்த விலங்குகளை மீட்கும் பிரத்யேகமான வலையை வீசிய தீயணைப்புத் துறையினர் பாபுவை ஒரு வழியாக மீட்டனர்.
இதைத் தொடர்ந்து அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.