தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்களை வழிமறித்த காட்டுயானைகள்!

மின்வாரிய ஊழியர்களை வழிமறித்த காட்டுயானைகள்!

webteam

தேனி சுருளியாறு மின்நிலைய குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் சுருளியாறு நீர் மின்நிலையம், தமிழக மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. வனத்திற்குள் உள்ள இந்த நீர் மின்நிலையத்தில், ஊழியர்களுக்காக 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்காக கம்பம் பகுதியில் இருந்து தினமும் 10 முறை தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

ஆனால் பேருந்துகள் வரும் வழியில் அவ்வப்போது காட்டு யானைகள் வழிமறித்து தொந்தரவு செய்வதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் ஜாக்கிரதையாக செல்லும்படி வனத்துறை எச்சரித்துள்ளது. இதற்கிடையே காட்டுயானைகள் அப்பகுதியிலேயே தற்போது முகாமிட்டுள்ளதால் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே அவற்றை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என ஊழியர்களின் குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.