கட்டிய பணத்தை மீண்டும் கட்டச் சொல்லும் தனியார் பைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரின் மனைவி சுதா மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் தமிழ்வாணன் தலைமையில் தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், தனியார் பைனான்ஸில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன் வாங்கி இருந்ததாகவும். தொடர்ந்து எந்தவித தாமதமும் இல்லாமல் கடனை கட்டி வந்ததாகவும். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாவது தவணையை கட்டிவிட்டோம்.
இந்நிலையில், தங்களிடம் பணத்தை வசூல் செய்த பைனான்ஸ் ஊழியர் நிறுவனத்தில் பணம் கட்டாமல், வேலையிலிருந்து நின்று விட்டதால் பணத்தை கட்டச் சொல்லி எங்களை பைனான்ஸ் கம்பெனியினர் தொந்தரவு செய்து வருவது மட்டுமின்றி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தனியார் பைனான்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் முரளிதரன் இதுகுறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.