தமிழ்நாடு

தேனி: இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

தேனி: இபிஎஸ்-க்கு எதிரான போஸ்டர் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்

webteam

தேனி அருகே எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நீக்கிவிட்டு பொய்வேஷம் போடும் பதவிவெறி பழனிசாமியே அ.தி.மு.கவை விட்டு வெளியேறு என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தேனி மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி என்றும், ஓ.பி.எஸ் அணியின் மாவட்ட செயலாளர் சையதுகான், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பெயருடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரை கண்ட அ.தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதிமுக கடமலை -மயிலை ஒன்றிய பொறுப்பாளர் செந்தட்டிகாளை தலைமையிலான அதிமுகவினர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் அவதூறாக போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.