திமுக தலைமைக் கழக உத்தரவுபடி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கூட்டணி தர்மத்தை மீறி நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக கவுன்சிலர் ரேணு பிரியா மாலை 5 மணிக்குள் ராஜினாமா செய்யாவிட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுவரை கூட்டணி கட்சி தர்மத்தை மீறி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கவுன்சிலரான ரேணுப்ரியா, மற்றும் திமுகவின் இதர கவுன்சிலர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மற்றும் அவரது கணவர் பாலமுருகன் ஆகியோர் போன் அழைப்புகளையும் எடுக்க மறுத்து நிராகரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தேனி அல்லிநகரம் நகராட்சியில் என்ன நடக்கும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் கூறியபடி மாலை 5 மணிக்கு மேல்தான் அனைத்தும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.