தமிழ்நாடு

பள்ளிகளில் மாணவர்கள் சாதியைக் குறிப்பிடும் கயிறுகள் அணியத் தடை - தேனி ஆட்சியர் அதிரடி

பள்ளிகளில் மாணவர்கள் சாதியைக் குறிப்பிடும் கயிறுகள் அணியத் தடை - தேனி ஆட்சியர் அதிரடி

sharpana

மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளில் ஜாதியைக் குறிப்பிடும் வகையில் கயிறு அணிந்து வர தடை விதித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல் முருகன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும் அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் பொழுதும் அனைவரோடும் கலந்து பழகாமல் தனிக் குழுக்களாக செயல்படும் சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, மாணவர் நலன் கருதி தலைமையாசிரியர்கள் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களுக்கு சாதியால் ஏற்படும் விளைவுகளை காலை பிரார்த்தனைக்குக் கூடும்போது எடுத்துக் கூற வேண்டும். சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவேண்டும்.

இவ்வகையான சாதியை அடையாளப்படுத்தும் கயிறு அணிவதைத் தடுக்குமாறும் அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாரிரியர்களும், மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” என தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்தில் வேல் முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.