தமிழ்நாடு

ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கொள்ளை

jagadeesh

சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் அலுவலகத்தில் ரூ. 60 லட்சம் கொள்ளையடித்துச் சென்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் சாலையில் ஆடு தொட்டி செயல்பட்டு வருகிறது. இறைச்சி வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் இங்கு வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கு அயனாவரம் பகுதியைச் சேர்ந்த முனீர் பாஷா, மண்ணடி பகுதியைச் சேர்ந்த முகமது ஏஜாஸ் ஆகிய இருவரும் ஒரே அலுவலகத்தில் ஆட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகின்றனர்.

அவர்களது அலுவலகத்துக்குக் கீழ்த்தளத்தில் தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்ற ஊழியர்கள் இன்று வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுச் சோதனையிட்ட போது பீரோவிலிருந்த ரூ. 60 லட்சத்து 50 ஆயிரம் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த இரண்டு வாரமாக வெளிமாநிலங்களிலிருந்து ஆடுகளைக் கொண்டு வந்து வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தனர். தற்போது அடிக்கடி வங்கிக்குச் செல்ல முடியாத காரணத்தால் வியாபார பணத்தை அலுவலகத்தில் ஊழியர்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அலுவலகத்தின் பூட்டை உடைத்து மேசையின் கீழ் இருந்த சாவியைக் கொண்டு பீரோவைத் திறந்து கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கீழ்த்தளத்திலிருந்த சங்கத்தின் கதவுகளையும் உடைத்து உள்ளே சென்று பார்த்ததும் தெரிய வந்துள்ளது. அங்கு ஏதும் சிக்காததால் கொள்ளையர்கள் முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் பீரோவிலிருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முனீர் பாஷா, முகமது ஏஜாஸ் ஆகிய இருவரும் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.